பொள்ளாச்சி அருகே ரே‌ஷன் கடை கட்டிடத்தில் செயல்படும் அரசு பள்ளிக்கூடம்: புதிய கட்டிடம் கட்டப்படுமா? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு


பொள்ளாச்சி அருகே ரே‌ஷன் கடை கட்டிடத்தில் செயல்படும் அரசு பள்ளிக்கூடம்: புதிய கட்டிடம் கட்டப்படுமா? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 28 Aug 2018 3:45 AM IST (Updated: 28 Aug 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே ரே‌ஷன் கடை கட்டிடத்தில் அரசு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. ஆகவே பழுதான பள்ளிக்கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடம் உள்ளது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே கருமாண்டகவுண்டனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் அம்மாபட்டி காலனி, கருமாண்டகவுண்டனூரை சேர்ந் 22 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு கடந்த 1988–ம் ஆண்டு புதிதாக கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது.

பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஒருவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் 75 சதவீதம் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இதற்கிடையில் கட்டிடம் கட்டி 30 ஆண்டுகள் ஆவதால் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி லேசாக இறங்கி விட்டது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளின் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு வாரத்திற்கு முன் தற்காலிகமாக பள்ளியை அந்த பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைக்கு இடமாற்றம் செய்தனர். மேலும் பள்ளிக்கூட கட்டிடம் பூட்டு போடப்பட்டு மூடப்பட்டது. தற்போது ரே‌ஷன் கடையில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் கரும்பலகை உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லாமல் பள்ளிக்கூடம் அவல நிலையில் செயல்பட்டு வருகிறது. ஆகவே பள்ளிக்கு நிரந்தரமாக புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:–

கருமாண்டகவுண்டனூரில் உள்ள அரசு பள்ளியில் சிறப்பாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள் ஆங்கிலத்தில் கூட பேசுகின்றனர். நல்ல ஆசிரியர்கள் இருந்தும், பாடம் நடத்த நல்ல வசதி இல்லை. பள்ளி கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக தற்காலிகமாக ரே‌ஷன் கடைக்கு பள்ளியை இடமாற்றம் செய்தனர். மேலும் ரே‌ஷன் கடை செயல்படும் நேரங்களில் பள்ளி குழந்தைகளை அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டிய உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் குழந்தைகள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே அதிகாரிகள் பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து பொள்ளாச்சி கல்வி மாவட்டஅதிகாரிகள் கூறியதாவது:– பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டுவது குறித்து வட்டார கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், கல்விக்குழு தலைவர் ஆகியோரை ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஒன்றிய அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தி விரைவில் கட்டிடம் கட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story