அருப்புக்கோட்டையில் பஸ்சில் கிடந்த சாக்குப்பையில் துப்பாக்கி: வீட்டுக்கு எடுத்துச் சென்ற முதியவர் அதிர்ச்சி


அருப்புக்கோட்டையில் பஸ்சில் கிடந்த சாக்குப்பையில் துப்பாக்கி: வீட்டுக்கு எடுத்துச் சென்ற முதியவர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 28 Aug 2018 4:30 AM IST (Updated: 28 Aug 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு வந்த அரசு பஸ்சில் கிடந்த சாக்குப்பையை வீட்டுக்கு கொண்டு சென்ற முதியவர் அதில் கைத்துப்பாக்கி இருந்ததால் பயந்துபோய் போலீசில் ஒப்படைத்தார்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்துள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

அருப்புக்கோட்டை அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது65). நகை தொழிலாளியான இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். தனியாக வாழ்ந்து வந்த இவர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடச்சென்றுள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு அங்கிருந்து மதுரை செல்லும் அரசு பஸ்சில் வந்துள்ளார்.

முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். மாலையில் பஸ் அருப்புக்கோட்டை வந்துள்ளது. காந்தி நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது அவரது இருக்கையின் பின்புறத்தில் ஒரு சிமெண்டு சாக்குப்பை இருப்பதை பார்த்துள்ளார். அந்த இருக்கையில் பயணிகள் இல்லாத நிலையில் அதனை அவர் நைசாக எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் சாக்குப்பையை அவர் பிரித்துப்பார்த்துள்ளார். அதில் பிளாஸ்டிக் கவர் சுற்றிவைக்கப்பட்டு இருந்தது. அதனை ஆவலோடு பிரித்த அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த சாக்குப்பையில் கைத்துப்பாக்கி இருந்துள்ளது. இதனால் பயந்துபோன அவர் நேற்று சாக்குப்பையோடு துப்பாக்கியை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தார்.

அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகனிடம் ஒப்படைத்தார். அதனை பெற்றுக்கொண்ட அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தொடர்ந்து விசாரணை நடத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது முருகேசன் நடந்ததை விவரித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் இரவே போலீஸ் நிலையம் வர இயலவில்லை என்று தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து பஸ்சில் அனாதையாக சாக்குப்பையில் கைத்துப்பாக்கியை விட்டுச்சென்றது யார் என்று விசாரணை நடக்கிறது. அந்த துப்பாக்கி சுற்றி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேக்கில் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் முகவரி இருந்துள்ளது. எனவே சென்னையை சேர்ந்தவர் விட்டுச்சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.


Next Story