பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்


பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்
x
தினத்தந்தி 28 Aug 2018 4:30 AM IST (Updated: 28 Aug 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளிடமும் நன்மதிப்பை பெற்றவர் என்று கவுன்சிலர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று காலை தொடங்கியதும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் காங்கிரஸ் குழு தலைவர் சிவராஜ் பேசுகையில், “வாஜ்பாய் ஒரு மக்கள் தலைவர். அவர் ஆட்சி நிர்வாகி என்பதையும் தாண்டி ஒரு சிறந்த கவிஞராக, மனிதநேயவாதியாக இருந்தார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை அவர் வளர்த்தார். அவர் இந்திய மக்கள் இதயங்களில் நிறைந்து இருக்கிறார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் மிக முக்கியமான பங்காற்றினார்“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி, “வாஜ்பாய் எதிர்க்கட்சிகளிடமும் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்தார். அவர் உலக அளவில் மிகப்பெரும் தலைவராக விளங்கினார். பா.ஜனதா கட்சியை கட்டமைத்து வளர்த்தவர். நாட்டில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒருவர் பிரதமர் பதவியில் அமர்ந்தால் என்றால் அது வாஜ்பாய் தான். பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்தி உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். பெங்களூருவில் சர்வதேச விமான நிலையம், மெட்ரோ ரெயில், 4-வது கட்ட காவிரி குடிநீர் திட்டம் ஆகியவை வர வாஜ்பாய் தான் காரணம்“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஜனதா தளம்(எஸ்) குழு தலைவி நேத்ரா நாராயணா, “அரசியல் எதிரிகளிடமும் நன்மதிப்பை பெற்று விளங்கியவர் வாஜ்பாய். அரசியலில் பொறுமையாக இருந்து நாட்டை நிர்வகித்தார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்“ என்றார். அனைவரும் பேசி முடித்த பிறகு கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Next Story