ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை: தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றி அவினாசி வீரர் தருணின் தாயார் பேட்டி


ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை: தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றி அவினாசி வீரர் தருணின் தாயார் பேட்டி
x
தினத்தந்தி 28 Aug 2018 5:30 AM IST (Updated: 28 Aug 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய போட்டியின் தடை தாண்டுதல் ஓட்டப்போட்டியில் அவினாசியை சேர்ந்த வீரர் தருண் வெள்ளிப்பதக்கம் வென்றார். இது அவருடைய தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தருணின் தாயார் பூங்கொடி கூறினார்.

திருப்பூர்,

ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டப்போட்டியில் இந்திய வீரர் தருண் (வயது 21) வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவர் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். தருணின் தந்தை அய்யாசாமி. விவசாயி. தாயார் பூங்கொடி(46). இவர் கணியாம்பூண்டியில் உள்ள மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக்குலே‌ஷன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தருணின் தங்கை சத்யா(19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். சத்யா பள்ளியில் படித்தபோது தமிழக கைப்பந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

தருண் 4–ம் வகுப்பு படிக்கும் போது அவருடைய தந்தை இறந்து விட்டார். அதில் இருந்து தனது தாயார் அரவணைப்பில் அவர் படித்து வந்தார். 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை கணியாம்பூண்டியில் தனது தாயார் வேலை பார்த்து வரும் பள்ளியிலும், பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளை திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள செஞ்சுரிபவுண்டேசன் மெட்ரிக்குலே‌ஷன் பள்ளியிலும் படித்தார்.

6–ம் வகுப்பு படித்த போதே தடகள வீரராக உருவெடுத்த தருண் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். பிளஸ்–2 படிக்கும்போது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கங்களை வென்றார். தற்போது ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை அறிந்த அவருடைய தாயார் பூங்கொடி மற்றும் அவருடைய வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் மிகவும் சந்தோ‌ஷம் அடைந்தனர். பூங்கொடிக்கு அங்கிருந்தவர்கள் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தருண், வெள்ளிப்பதக்கம் பெற்ற தகவல் குறித்து அவருடைய தாயார் பூங்கொடியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

6–ம் வகுப்பு படிக்கும் போதே தடகள போட்டியில் தருண் சிறப்பாக விளையாடினான். தேசிய அளவில் இதுவரை 50–க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கங்கள் வென்றான். அதன்பிறகு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம் என்று கூறி கடுமையான பயிற்சி மேற்கொண்டான். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அத்லெட்டிக் பெடரே‌ஷன் ஆப் இந்தியாவில் சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறான்.

கடந்த 2016–ம் ஆண்டு நடந்த தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 4x 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியிலும் தங்கப்பதக்கங்கள் வென்றான். மிகுந்த எதிர்பார்ப்புடன் 2016–ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தொடர் ஓட்டப்போட்டியில் பங்கேற்றான். வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும் மனம் தளராமல் கடும் பயிற்சி மேற்கொண்டு காமன்வெல்த் போட்டிக்கு தயாரானான். அந்த நேரத்தில் அவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் தீவிர பயிற்சி மேற்கொண்டு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றான். ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

விடா முயற்சியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டான். எங்களை சந்திக்க வருவதைக்கூட குறைத்துக்கொண்டு பயிற்சி மேற்கொண்டான். ஆசிய விளையாட்டு போட்டிக்கு செல்லும்போது ‘தங்கம் எப்படியும் வென்று விடுவேன்’ என்று உறுதியாக கூறி சென்றான். அவனுக்காக இன்று(நேற்று) மாலை வீட்டில் இருந்தபடி டி.வி.யில் ஆசிய விளையாட்டு போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்தோம். 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதும் மிகவும் சந்தோ‌ஷம் அடைந்தேன். தருணின் தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றி இது. எனது பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் வந்து என்னிடம் வாழ்த்து கூறியபோது மிகவும் சந்தோ‌ஷமாக இருந்தது. ஆசிய போட்டியில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியிலும் பங்கேற்க உள்ளான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story