கர்நாடகத்தில் மழை பாதிப்பு குறித்து குமாரசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்


கர்நாடகத்தில் மழை பாதிப்பு குறித்து குமாரசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2018 5:30 AM IST (Updated: 28 Aug 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மழை பாதிப்பு தொடர்பாக குமாரசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.3,000 கோடி தேவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெங்களூரு,

குடகு உள்பட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குடகு மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. குமாரசாமி 2 நாட்கள் ஹெலிகாப்டரில் பறந்து வெள்ள சேதங்களை ஆய்வு செய்தார். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் குடகு மாவட்டத்திற்கு வந்து பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ஏற்பட்டு உள்ள இந்த மழை வெள்ள சேதம் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, ஹாசன், சிக்கமகளூரு, சிவமொக்கா, உத்தரகன்னடா, பெலகாவி, மைசூரு மற்றும் பிற மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் முதல் கட்ட ஆய்வின்படி கர்நாடகத்தில் 2,225 கிலோ மீட்டர் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். 240 பாலங்கள், 65 அரசு கட்டிடங்கள் சேதம் அடைந்திருப்பதாக தெரிவித்தனர். சாலை, அரசு கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் போன்றவற்றின் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.3,000 கோடி தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதால், மடிகேரி-சுள்ளியா, கொட்டிகேஹார-சார்மடி வன சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் முதல்-மந்திரியிடம் கூறினர். குடகு மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 4,500 பேர் மீட்கப்பட்டனர் என்றும், 53 நிவாரண முகாம்களில் 7,500 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தினமும் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினர்.

இதை கேட்டுக் கொண்ட முதல்-மந்திரி குமாரசாமி, அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

அதாவது சாலை, பாலம், அரசு கட்டிடங்கள் பாதிப்பு குறித்து ஒரு விவரமான அறிக்கையை தயார் செய்ய வேண்டும். தனியார் கட்டிடங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்க வேண்டும். காபி, பாக்கு, நெல் உள்ளிட்ட பயிர்களின் சேதம் குறித்து தனியாக ஒரு அறிக்கையை தயார்படுத்த வேண்டும்.

வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பது குறித்து மக்களிடம் கருத்துகளை கேட்டறிய வேண்டும், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வீடுகளை கட்டி கொடுக்க அறிக்கையை தயாரிக்க வேண்டும். இந்த இயற்கை பேரிடரால் மரணம் அடைந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் குறித்த விவரங்களை சேகரித்து வழங்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மாதிரி கிராமங்களாக மாற்றுவது குறித்து ஒரு திட்ட வரைபடத்தை தயாரிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே குடிநீருக்கு பயன்படுத்த வேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் மக்களுக்கு கிடைத்ததாக கூறினாலும், இன்னும் குக்கிராமங்களில் அந்த வசதிகள் கிடைக்கவில்லை என்று புகார்கள் வருகின்றன. அவற்றின் மீது அதிகரிகள் கவனம் செலுத்த வேண்டும். தொடர்பு துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு சாலை வசதிகளை மீண்டும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வெள்ள சேதங்கள் குறித்து மத்திய அரசுக்கு வழங்க விவரமான அறிக்கையை தயாரிக்க வேண்டும்.” இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, மருத்துவ கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், வீட்டு வசதித்துறை மந்திரி யு.டி.காதர், சுற்றுலாத்துறை மந்திரி சா.ரா.மகேஷ், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஐ.எஸ்.என்.பிரசாத், வளர்ச்சி கமிஷனர் வந்திதா சர்மா, வருவாய்த்துறை முதன்மை செயலாளர் கங்காராம் படேரியா உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story