திருபுவனை அருகே பயங்கர விபத்து: விழுப்புரம் அ.தி.மு.க. பிரமுகர், டிரைவர் பலி


திருபுவனை அருகே பயங்கர விபத்து: விழுப்புரம் அ.தி.மு.க. பிரமுகர், டிரைவர் பலி
x
தினத்தந்தி 28 Aug 2018 4:00 AM IST (Updated: 28 Aug 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தனியார் பஸ்சும் காரும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் விழுப்புரம் அ.தி.மு.க. பிரமுகர், கார் டிரைவர் பலியானார்கள்.

திருபுவனை,

கேரளாவில் சமீபத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல் புதுச்சேரி மாநிலம் உயிர்த்துளி அமைப்பு சார்பில் பொதுமக்களிடம் நிவாரண பொருட்கள் பெற்று கடந்த 25–ந் தேதி புதுவையில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் புறப்பட்டனர்.

நிவாரணப் பொருட்களுடன் உயிர்த்துளி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 15–க்கும் மேற்பட்டோர் பாலக்காடு சென்றனர். அங்கிருந்த முகாமில் நிவாரணப்பொருட்களை வழங்கிவிட்டு மீண்டும் புதுவைக்கு திரும்பினர்.

ஒரு தனியார் பஸ்சில் விழுப்புரம் வழியாக புதுவைக்கு நேற்று இரவு வந்துகொண்டிருந்தனர். திருவண்டார்கோவில் அருகே வந்தபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு சொகுசு கார் அந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் டிரைவர் விழுப்புரத்தை சேர்ந்த சித்திக் (வயது26), விழுப்புரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அம்ருதீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரில் இருந்த மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பயங்கர விபத்து அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story