மகளை மீட்டு தரக்கோரி கவர்னர் மாளிகை முன்பு தனியார் நிறுவன ஊழியர் தர்ணா


மகளை மீட்டு தரக்கோரி கவர்னர் மாளிகை முன்பு தனியார் நிறுவன ஊழியர் தர்ணா
x
தினத்தந்தி 28 Aug 2018 4:30 AM IST (Updated: 28 Aug 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

மகளை மனைவியிடம் இருந்து மீட்டு தரக்கோரி கவர்னர் மாளிகை முன்பு தனியார் நிறுவன ஊழியர் தர்ணா போராட்டம் நடத்தினார்.

புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டை விடுதலைநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் போளுரை சேர்ந்த மீனாட்சி (25) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. செந்தில்குமாருக்கு தந்தை இல்லாததால் தாய் சத்யாவுடன் வசித்து வந்துள்ளார்.

திருமணம் ஆனநாள் முதலே மீனாட்சி தனிக்குடித்தனம் போக வேண்டும் என கணவரிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மீனாட்சிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதுவை ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் மாமியார் வீட்டிற்கு வந்த மீனாட்சி தனது கணவரிடம் தனி குடித்தனம் செல்ல வேண்டும் என்றும், மாமியார் பெயரில் இருக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்கவேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்–மனைவிக்கு இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே மீனாட்சி யாருக்கோ போன் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஒரு கார் அவரது வீட்டுவாசலில் வந்து நின்றுள்ளது. உடனே மீனாட்சி தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அந்த காரில் ஏறி சென்றுள்ளார். இதனை செந்தில்குமார், அவரது தாயார் தடுத்தும் அவர் சென்று விட்டார்.

உடனே செந்தில்குமாரும், சத்யாவும் இது குறித்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. நேற்று காலை செந்தில்குமார் மீண்டும் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது போலீசார் எந்த விதமான பதிலும் அவருக்கு அளிக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் தனது தாயார் சத்யாவுடன் புதுவை கவர்னர் மாளிகை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் எனது குழந்தையை மீட்டு தர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்கள் 2 பேரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவர்கள், முதலியார்பேட்டை போலீசாரிடம் செல்போனில் பேசினர். அப்போது போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் செந்தில்குமாரும், அவரது தாயாரும் போராட்டத்தினை கைவிட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story