செயற்கை மணல் பரப்பில் குளித்த போது புதுவை மாணவர்கள் கடலில் மூழ்கினர்


செயற்கை மணல் பரப்பில் குளித்த போது புதுவை மாணவர்கள் கடலில் மூழ்கினர்
x
தினத்தந்தி 28 Aug 2018 4:15 AM IST (Updated: 28 Aug 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

செயற்கை மணல் பரப்பில் குளித்த போது ராட்சத அலை வாரி சுருட்டியதில் அரசு தொழில்நுட்ப பள்ளி மாணவர்கள் கடலில் மூழ்கினர். அவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை.

புதுச்சேரி,

புதுச்சேரி கடற்கரை சாலையில் தலைமைச் செயலகம் அருகே செயற்கையாக மணல் பரப்பு உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் சில அடி தூரம் மட்டுமே கடலுக்குள் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் ஆபத்தை உணராமல் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் வாசிகளும் கடலில் இறங்கி கால்களை நனைத்து விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதுபோன்ற நேரங்களில் எதிர்பாராதவிதமாக கடல் அலையில் சிக்கிக்கொள்பவர்களை மீட்கவும், கண்காணிக்கவும் கடற்கரை பகுதியில் மீட்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் செயற்கை மணல் பரப்பு பகுதியில் நேற்று மதியம் 2 மணி அளவில் சிலர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் 2 பேர் கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கிக் கொண்டனர். அவர்களை வாரி சுருட்டிக் கொண்டு கடலுக்குள் அலை இழுத்துச் சென்றது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலோர மீட்பு குழுவினர் விரைந்து சென்று அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் தெரிந்து கடலோர காவல் படை மற்றும் பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கடற்கரை மணல் பரப்பில் கிடந்த புத்தகப்பை, அடையாள அட்டையை வைத்து விசாரித்தனர்.

கடற்கரையோரம் கிடந்த அவர்களது சட்டை பையில் இருந்த சாவியை எடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களில் போட்டு பார்த்தனர். இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த சாவி பொருந்தியது. அந்த மோட்டார் சைக்கிள் யாருடையது என்பதை விசாரித்ததில் கடலில் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் யார்? என்பது பற்றிய விவரம் தெரியவந்தது.

இதன் மூலம் அவர்கள் புதுச்சேரி முதலியார்பேட்டை உடையார்தோட்டம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு–சுமதி தம்பதியரின் மகன் பிரதீப் (வயது 16), அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான ரமேஷ்–கற்பகம் தம்பதியரின் மகன் கபிலன் (16) என்பது தெரியவந்தது. இவர்கள் லாஸ்பேட்டையில் உள்ள தொழில்நுட்ப பள்ளியில் படித்து வந்தவர்கள் ஆவார்கள்.

இதுபற்றி மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாலை 6 மணி வரை கடலோர மீட்பு குழுவினர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததாலும், இரவு நேரமாகி விட்டதாலும் மாணவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதுகுறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க மாணவர்களின் பெற்றோர் சென்றபோது, அங்கிருந்த போலீசார் நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தெரிவித்தனர். அதன்படி அவர்கள் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

இதற்கிடையே போலீஸ் ஐ.ஜி.சுரேந்தர்சிங் யாதவ் உத்தரவின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே தங்களது மகன்களை கடல் அலை இழுத்துச் சென்ற நிலையில் மனமுடைந்த பெற்றோரை புகாரை வாங்காமல் போலீசார் அலைக்கழித்தது மனிதாபிமானமற்ற செயலாக இருந்தது.


Next Story