திருவள்ளூர் அருகே காது, மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் வாலிபர் பிணம் அடித்துக்கொலையா? போலீஸ் விசாரணை


திருவள்ளூர் அருகே காது, மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் வாலிபர் பிணம் அடித்துக்கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 28 Aug 2018 4:00 AM IST (Updated: 28 Aug 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

காது, மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் வாலிபர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிரயாங்குப்பம் காலனி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மணி. ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருடைய மகன் குமரன்(வயது 33). இவர், வீட்டின் அருகேயே சொந்தமாக செங்கல் சூளை வைத்து, செங்கல் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று முன்தினம் இரவு குமரன், செங்கல் சூளைக்கு சென்று விட்டுவருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. செங்கல் சூளையில் படுத்து இருக்கலாம் என அவரது பெற்றோர் நினைத்துக்கொண்டனர்.

பிணமாக கிடந்தார்

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் செங்கல் சூளை அருகே கடம்பத்தூர்-திருவள்ளூர் நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு கட்டிடத்தின் அருகே குமரன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது மூக்கு மற்றும் காதில் இருந்து ரத்தம் வழிந்து இருந்தது. அவரது கைவிரல் களில் இருந்த நகங்கள் பிடுங்கப்பட்டு இருந்தது.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், குமரனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், ஓடிச்சென்று மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

சாவில் சந்தேகம்

இதையடுத்து குமரனின் தந்தை மணி, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தன் மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், குமரனை யாரேனும் முன்விரோதம் காரணமாக அடித்துக்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story