திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போலீசாருடன் இந்து முன்னணியினர் வாக்குவாதம்


திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போலீசாருடன் இந்து முன்னணியினர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 28 Aug 2018 4:15 AM IST (Updated: 28 Aug 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போலீசாருடன் இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

விநாயகர் சதுர்த்தியையொட்டி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று இந்து முன்னணியினர் மாநில பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் வினோத் கண்னா, கிழக்கு மாவட்ட தலைவர் பொன்னா, மாவட்ட பொதுசெயலாளர் ராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர்.

வாக்குவாதம்

பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டரை சந்திக்க கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காமல் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.

இதனால் போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழாவை நாங்கள் பல வருடங்களாக அமைதியாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு வினாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு ஒரு ஆணையை பிறப்பித்தது. அது சாதாரண மக்கள் கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டிருந்தது. அதை தளர்த்தவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதையடுத்து அவர்கள், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story