சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Aug 2018 4:00 AM IST (Updated: 28 Aug 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தென்தாமரைகுளம்,

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. பதினொன்றாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 11 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் ,நடைபெற்றது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வைகுண்ட சாமி எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது. தலைப்பாகை அணிந்து காவியுடை தரித்த அய்யா வழி பக்தர்கள் ‘அய்யா சிவசிவா அரகரா‘ என்ற பக்தி கோஷத்திற்கிடையே தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த விழாவுக்கு தலைமைப்பதி தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குரு பால ஜனாதிபதி திருத்தேர் பணிவிடைகளை செய்தார். தேர் கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக மாலை 3 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.

அங்கு நீண்ட வரிசையில் நின்ற அய்யா வழி பக்தர்கள், அய்யாவுக்கு வெற்றிலை பாக்கு, பழம், பன்னீர், பூக்கள் ஆகிய பொருள்களை சுருள் படைத்து வழிபட்டனர். அவர்களுக்கு அய்யாவின் அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வந்தது.

இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் அய்யா தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தலைமைப்பதியின் முன்பகுதியில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து, கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

Next Story