கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் காரணமாக 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகியதால் நிவாரணம் வழங்க கோரி மனு
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 1,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் அழுகியதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி அதிகாரியிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
திருச்சி,
மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இடைவிடாது தொடர்ச்சியாக 15 நாட்களுக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்தின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கொள்ளிடம் ஆற்றில் நம்பர் 1 டோல்கேட்–ஸ்ரீரங்கம் இடையே உள்ள பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்தது.
அதேபோல் முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் அணை 9 மதகுகளுடன் இடிந்து விழுந்தது. கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கால் டி.கள்ளிக்குடி, லால்குடி, அரியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள வயல்களிலும் வெள்ளம் புகுந்தது. இதனால், வாழை, நெல் பயிர்களில் பல நாட்களாக வடியாமல் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், மனு கொடுப்பதற்காக விவசாயிகள் வள்ளல், அப்புராசு, செல்வராஜ், மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட சிலர் அழுகிய நெற்பயிர்களுடன் வந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் டி.கள்ளிக்குடி, அரியூர், செங்கரையூர், லால்குடி, கே.வி.பேட்டை ஆகிய கிராமங்களின் ஆற்றோர வயல்கள் 8 நாட்களாக தொடர்ந்து தண்ணீரில் மூழ்கியதால், விளைந்து அறுவடை செய்யும் தருவாயில் 1,500 ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்பயிர்கள் அழுகி நாசமாகி விட்டன. ஒரு ஏக்கருக்கு ரூ.26 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். மேலும் மின் மோட்டார்களும் பழுதாகி விட்டன. எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி உதவிட வேண்டும்.
இவ்வறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புறநகர் மாவட்ட துணைச்செயலாளர் செல்வராஜ் மற்றும் திருவெறும்பூர் ஒன்றியம் தொண்டமான்பட்டி கிராம மக்கள் கையெழுத்திட்டு கொடுத்த மனுவில், தொண்டமான்பட்டி கிராமத்தில் 40 விவசாய குடும்பங்கள் உள்ளன. திருவெறும்பூர்–பத்தாளம்பேட்டை இடையே சரியான சாலை வசதி இல்லாததால், இடையில் அரை கிலோ மீட்டர் தூரம் வயல், வரப்புகளில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் மாணவ–மாணவிகளும் அவதிக்குள்ளாகின்றனர். திருவெறும்பூருக்கு 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வேறு வழியில் செல்ல வேண்டும். எனவே, அரை கிலோ மீட்டர் தூர சாலையை தரமானதாகவும், அகலப்படுத்தியும் அமைத்து தர வேண்டும், என்று கூறியுள்ளனர்.