‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி மர்மநபர்களுக்கு வலைவீச்சு


‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Aug 2018 10:36 PM GMT (Updated: 27 Aug 2018 10:36 PM GMT)

‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

தானே,

தானே மாவட்டம் பயந்தர் பகுதியை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு ‘பேஸ்புக்’ மூலம் சாலமன் ஜக் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் ஐஸ்லாந்தை சேர்ந்தவர் எனவும், ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பதாகவும் பெண்ணிடம் கூறினார். இதை உண்மையென நம்பிய பெண், அவரிடம் நட்பாக பழகி வந்தார்.

2 பேரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு வாட்ஸ்- அப்பிலும் உரையாடி வந்தனர். சில மாதங்களுக்கு முன் சாலமன் ஜக் பெண்ணுக்கு விலை உயர்ந்த அன்பளிப்பு பொருட்களை அனுப்பி வைத்து உள்ளதாக கூறினார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று சுங்க அதிகாரி என கூறிக்கொண்டு ஒருவர், பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள் வந்திருப்பதாகவும், அதற்கு அதிகளவு பணம் சுங்க கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.

இதையடுத்து அந்த பெண் தனக்கு விலை உயர்ந்த அன்பளிப்பு பொருட்கள் கிடைக்கும் என்ற ஆசையில் அந்த நபர் கூறிய வங்கிக்கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.8½ லட்சம் வரை அனுப்பினார். எனினும் அவருக்கு வெளிநாட்டில் இருந்து அன்பளிப்பு எதுவும் வரவில்லை.

மேலும் சுங்க அதிகாரி என கூறிக்கொண்டு பேசிய நபர் மேலும் மேலும் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். இதனால் பெண்ணுக்கு சாலமன் ஜக் மற்றும் சுங்க அதிகாரி என கூறிக்கொண்டு பேசியவர்கள் மீது சந்தேகம் உண்டானது.

இதையடுத்து தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த பெண் பயந்தர் போலீசில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பெண்ணிடம் பணமோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

சமீபகாலமாக வெளிநாட்டினர் போல ‘பேஸ்புக்’கில் பெண்களிடம் பழகி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. எனவே ‘பேஸ்புக்’கில் முன்பின் தெரியாதவர்களிடம் பேசி ஏமாற வேண்டாம் என பொதுமக்களை போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Next Story