காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்த பெண்கள்
குடிநீர் தட்டுப்பாடு எதிரொலியாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு எரதிமக்காள்பட்டியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு மனுக்கள் அளித்தனர். கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தேவதானப்பட்டி பேரூராட்சி கக்கன் காலனியை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் குடியிருப்பில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. சரியான சாக்கடை வசதி இல்லை. குடிநீர் வசதி இல்லை. தெருவிளக்குகள் சரியாக எரிவது இல்லை. சுகாதாரக்கேட்டால் நோய் பரவும் நிலைமை உள்ளது. எனவே, இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இக்கூட்டத்தில் மனு அளிப்பதற்காக ஆண்டிப்பட்டி அருகே உள்ள எரதிமக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் காலிக்குடங்களுடன் வந்தனர். அவர்கள் தங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவது குறித்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘ஆண்டிப்பட்டி தாலுகா மரிக்குண்டு ஊராட்சி எரதிமக்காள்பட்டி முத்திரைநகரில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆழ்துளைகிணறு மூலம் தண்ணீர் எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தோம். நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது தொலைவில் உள்ள குடிநீர் குழாய்க்கு நடந்து சென்று தண்ணீர் பிடிக்கிறோம். அங்கும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. எங்களுக்கு வள்ளல்நதி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
பா.ஜ.க. தேனி நகர தலைவர் ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘தேனி பழைய பஸ் நிலையம் எதிரே டாஸ்மாக் மதுக்கடை மற்றும் மதுபான பார் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது. இங்கு டாஸ்மாக் மதுக்கடை அமைத்தால் பெண்கள், மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும். சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’ என்று கூறியிருந்தனர்.
இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘வருகிற செப்டம்பர் 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. தமிழக அரசு இந்த விழாவுக்கு 25 கடுமையான நிபந்தனைகளை விதித்து உள்ளது. இந்த நிபந்தனைகள் இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதாக தெரிகிறது. எனவே, இந்த நிபந்தனைகள் விதித்த அரசாணையை ரத்து செய்து வழிபாட்டு உரிமையை மீட்டுத் தர வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘தேனி மாவட்டத்தில் இரவு நேரங்களில் 200 கிலோமீட்டர் முதல் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை உள்ள பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களை டிரைவர், கண்டக்டர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப ஏதோ ஓரிடத்தில் நிறுத்திக் கொள்கின்றனர். எனவே, 200 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு முறை உணவு, கழிவறை என அனைத்து வசதிகளும் உள்ள இடத்தில் 15 நிமிடங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நிறுத்தும் இடங்கள் குறித்த விவரங்கள் அனைவரும் பார்க்கும் வகையில் பஸ்களின் உட்புறம் எழுதி வைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ‘மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலா இடங்கள் உள்ளன. மேகமலையில் கோடை விழா, சுருளி அருவியில் சாரல் விழா, வைகை அணையில் பெருவிழா போன்றவை கொண்டாடப்பட்டு வந்தது. கோடை விழா 6 ஆண்டுகளாகவும், சாரல் விழா 3 ஆண்டுகளாகவும், வைகை பெருவிழா 2 ஆண்டுகளாகவும் நடத்தப்படாமல் உள்ளது. சுற்றுலா இடங்களில் விழாக்கள் கொண்டாடினால் தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், அழகு சாதன விற்பனை கடைகள், உணவு விடுதிகள், வாடகை கார் வாகன ஓட்டிகள் பயன்பெறுவார்கள். எனவே மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களில் அரசு சார்பில் சுற்றுலா மேம்பாட்டுக்கான விழாக்கள் நடத்த வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசுந்தரராஜ் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘தேனி கொட்டக்குடி ஆற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் சேதம் அடைந்துள்ளது. பாலம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளது. பாலத்தின் உறுதித்தன்மையை சிறந்த பொறியாளர் குழுவை நியமித்து பரிசோதித்து பார்க்க வேண்டும். தரம் குறித்த பரிசோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள், பிரதமருக்கு அனுப்புவதற்காக கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரையின்படி விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதல் விலை வைத்து கொள்முதல் செய்ய சட்டப்பூர்வமான ஏற்பாடு செய்ய வேண்டும், நிலச்சீர்திருத்த சட்டத்தை அமலாக்கி நிலமில்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 10 கோடி கையொப்பம் வாங்கி பிரதமருக்கு சமர்ப்பிக்க அகில இந்திய விவசாயிகள் சங்கம் முடிவு செய்து இருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் பெறப்பட்ட விவசாயிகளின் கையொப்பம் இத்துடன் சமர்ப்பிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
Related Tags :
Next Story