ரோப்காரில் இருந்து பக்தர்களை மீட்பது குறித்து ஒத்திகை


ரோப்காரில் இருந்து பக்தர்களை மீட்பது குறித்து ஒத்திகை
x
தினத்தந்தி 28 Aug 2018 3:15 AM IST (Updated: 28 Aug 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பாதி வழியில் நின்றால், அதில் இருந்து பக்தர்களை மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பழனி, 


பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர் களை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு விரைவாக கொண்டு செல்வது ரோப்கார் சேவை ஆகும். இதனால் மலைக்கோவிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்களின் முதல் தேர்வாக ரோப்கார் சேவையே விளங்குகிறது. ரோப்காரில் பக்தர்கள் பாதுகாப்புக்காக தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதன்படி கடந்த மாதம் (ஜூலை) 12-ந்தேதி ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் தொடங்கியது. ரோப்கார் நிலையத்தின் கீழ் மற்றும் மேல் தளத்தில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் கழற்றப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.


அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோப்காரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ரோப்காரில் பழுது ஏற்பட்டு பெட்டிகள் பாதி வழியில் நின்றால் அதில் இருக்கும் பக்தர்களை எப்படி பத்திரமாக மீட்பது என்பது குறித்த மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கோவில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் இந்த மீட்பு பணி நடத்தப்பட்டது. ரோப்காரில் சிக்கியவர்களை மீட்பதில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் கயிறு மற்றும் மூங்கில் கம்புகளால் செய்யப்பட்ட இருக்கை மூலம் பெட்டியில் தவிக்கும் பக்தர் களை பத்திரமாக மீட்பது போன்று தத்ரூபமாக நடித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், ரோப்கார் பாதி வழியில் நின்றால் அதில் இருக்கும் பக்தர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பரிசோதனைகளும் முடிந்து வருகிற 30-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் ரோப்கார் சேவை மீண்டும் செயல்பட தொடங்கும் என்றார்.

மீட்பு பணி ஒத்திகையில் ரோப்கார் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் ரெங்கசாமி, முன்னாள் செயற்பொறியாளர் நாச்சிமுத்து மற்றும் ரோப்கார் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story