திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எந்த சின்னத்தில் நின்றாலும் அ.ம.மு.க. வெற்றி பெறும் - தங்க தமிழ்ச்செல்வன்


திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எந்த சின்னத்தில் நின்றாலும் அ.ம.மு.க. வெற்றி பெறும் - தங்க தமிழ்ச்செல்வன்
x
தினத்தந்தி 28 Aug 2018 5:00 AM IST (Updated: 28 Aug 2018 8:51 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எந்த சின்னத்தில் நின்றாலும் அ.ம.மு.க. வெற்றி பெறும் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது இதனையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தொகுதியில் முகாமிட்டு மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வடபழஞ்சி, தென்பழஞ்சி, சாக்கிலிப்பட்டி வேடர்புளியங்குளம் தனக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமம் கிராமமாக சென்று கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். இந்த முகாமிற்கு திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் கருத்தக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் வீரமணி வரவேற்றார். உறுப்பினர் சேர்க்கை முகாமில் தங்க தமிழ் செல்வன் பேசும்போது, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி அ.ம.மு.க.வின் பலம் நிருப்பிக்கப்படும். அதன் மூலம் அம.மு.க.விற்கு திருப்புமுனை ஏற்படும். குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். தேர்தல் எப்போது வந்தாலும் வாக்காளர்கள் டி.டி.வி. தினகரன் சொல்லும் வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராக இருப்பதாக கூறி வருகிறார்கள். அ.ம.மு.க.வின் பக்கம் வாக்காளர்கள் இருக்கும்வரை எதிர் அணியினர் தானாக வீழ்ந்து விடுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இளைஞரணி மாநில செயலாளர் டேவிட் அண்ணாத்துரை, மாவட்ட செயலாளர் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வெற்றி பெறுவது உறுதி. எந்த சின்னத்தில் நின்றாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சியில் 1 கோடி பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இன்னும் 2 மாதத்தில் மேலும் 1 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்ப்போம். தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க முடியாது. ஏனென்றால், இந்த கொள்ளையில் ஆளும் கட்சியினருக்கும் பங்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story