தஞ்சை சரபோஜி மார்க்கெட் பகுதியில் இறைச்சி கடைகளுக்கு இடையே குளம்போல் தேங்கியுள்ள சாக்கடைநீர்


தஞ்சை சரபோஜி மார்க்கெட் பகுதியில் இறைச்சி கடைகளுக்கு இடையே குளம்போல் தேங்கியுள்ள சாக்கடைநீர்
x
தினத்தந்தி 29 Aug 2018 4:00 AM IST (Updated: 29 Aug 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை சரபோஜி மார்க்கெட் பகுதியில் இறைச்சி கடைகளுக்கு இடையே குளம்போல் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் பகுதியில் சரபோஜி மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறி கடைகள், மீன் கடைகள், ஆட்டு இறைச்சி கடைகள், கோழி இறைச்சி கடைகள், கருவாட்டுக்கடைகள், மளிகை கடைகள், பாத்திரக்கடைகள், பூ கடைகள், நாட்டு மருந்துகடைகள் போன்றவை உள்ளன.

இதில் மீன்மார்க்கெட் இருந்த பகுதி மிகவும் சேதம் அடைந்ததால் அங்கிருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக மீன்மார்க்கெட் கீழவாசல் பகுதியில் கட்டப்பட்டது. இதையடுத்து மீன்மார்க்கெட் அங்கு செயல்பட்டு வருகின்றன. மற்ற கடைகள் அனைத்தும் பழைய இடத்திலேயே இயங்கி வருகின்றன. சரபோஜி மார்க்கெட் பகுதியில் மட்டும் 400–க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளன. இதன் மூலம் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் வருகின்றன.


இதில் மீன்மார்க்கெட் பகுதியில் புதிய வணிகவளாகம் கட்ட மாநகராட்சி முடிவுசெய்தது. அதுவும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. தற்போது சரபோஜி மார்க்கெட் பகுதி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும், குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறி வருகின்றன.

மேலும் ஆட்டு இறைச்சி கடைகள், கோழி இறைச்சி கடைகள், கருவாட்டு கடைகள் என 50–க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் சார்பில் மாநகராட்சிக்கு தினமும் வாடகை செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த கடைகளுக்கு மத்தியில் சாக்கடை குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.


மேலும் சாக்கடையில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் அந்த பகுதியில் செல்ல முடியாத நிலை உள்ளது. அங்கு கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளும் தினமும் சாக்கடை துர்நாற்றத்துக்கு மத்தியில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இறைச்சிக்கடைகளில் உள்ள கழிவுநீர் செல்வதற்கு அந்த பகுதியில் சாக்கடை வாய்க்கால் இருந்தது. இந்த வாய்க்கால் வழியாக கழிவுநீர் தங்கு தடையின்றி சென்றது.

ஆனால் தற்போது சாக்கடை நீர் செல்ல வழியில்லை. சாக்கடை வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பாலும், பல இடங்களில் சாக்கடை வாய்க்கால் தெரியாத அளவுக்கு மண்மேடிட்டு காணப்படுகின்றன. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் இறைச்சிகடைகளுக்கு இடையே தேங்கி காணப்படுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


பழைய மீன்மார்க்கெட் இருந்த பகுதியிலும் கழிவுகள் கொட்டப்பட்டு குப்பைகள் மலைபோல தேங்கிக்கிடக்கிறது. தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. அந்த பணிகள் மேற்கொள்ளும் போது மேற்கொள்ளட்டும். தற்போது சரபோஜி மார்க்கெட் பகுதியில் குளம்போல சாக்கடை நீர் தேங்கிக்கிடப்பதை அகற்ற உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story