குடகு மாவட்டத்தில் மீண்டும் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்கள் அச்சம்


குடகு மாவட்டத்தில் மீண்டும் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 29 Aug 2018 3:30 AM IST (Updated: 29 Aug 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

குடகு மாவட்டத்தில் மீண்டும் பெய்துவரும் தொடர் கனமழையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குடகு, 

குடகு மாவட்டத்தில் மீண்டும் பெய்துவரும் தொடர் கனமழையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

17 பேர் சாவு

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து 51 நிவாரண முகாம்களில் தங்கியிருந்தனர். மேலும் மழை வெள்ளம், நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. மழை வெள்ளத்துக்கு குடகு மாவட்டத்தில் 17 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளனர்.

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், மாவட்ட நிர்வாகமும் ஹெலிகேமரா மூலம் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருகிறது. குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளதால், அங்கு மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. குடகு மாவட்டத்தில் மக்கந்தூர், ஆலேறி, கல்லூர், தொட்டகுந்துபெட்டா, முக்கொட்லு, சம்பாஜே ஆகிய பகுதிகளில் தான் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒருவரின் உடல் மீட்பு

குடகு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை கடந்த 3 நாட்களாக நின்றுள்ளதால், மழை வெள்ளம் வடிந்துள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த ஏராளமான மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றனர். ஆனால் நிலச்சரிவால் வீடுகளை இழந்த மக்கள், இன்னும் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு மேலாக பெய்து வந்த தொடர் கனமழை நின்றதால், குடகில் இயல்பு நிலை திரும்பி வந்தது. மேலும் காவிரி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து உள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, கரையோரத்தில் இருந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருந்தனர். காவிரி ஆற்றில் வெள்ளம் குறைந்ததால், தங்களது இருப்பிடத்துக்கு திரும்பினர்.

மடிகேரி அருகே முக்கொட்லு பகுதியை சேர்ந்த முக்கந்திரா சாபு (வயது 62) என்பவரை கடந்த 11 நாட்களாக அவருடைய குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த முக்கந்திரா சாபுவின் உடலை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர். இதனால் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

கலெக்டர் ஆய்வு

கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நிவாரண பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன. நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நேற்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க நிவாரண முகாம்களில் உள்ள மக்களை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மடிகேரி-மங்களூரு சாலையில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த சாலையில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாலையோரங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் பணிகள் முடிவடைந்து போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சாருலதா சோமல் ஆகியோர் நேற்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாமுண்டீஸ்வரி நகர் பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மீண்டும் கனமழை

இந்த நிலையில் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. இதனால் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினத்தில் இருந்து குடகு மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக மடிகேரி, காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா, சுண்டிகொப்பா, மக்கந்தூர், அட்டிஒலே, சித்தாப்புரா ஆகிய பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கி உள்ளதால், பெரிய அசம்பாவிதம் நடக்குமோ என்று குடகு மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தலைக்காவிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதனால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் காவிரி ஆற்றில் வெள்ளம் குறைந்ததால், நிவாரண முகாம்களில் தங்கியிருந்த காவிரி ஆற்றங்கரையோரம் வசித்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். தற்போது மீண்டும் தண்ணீர் அதிகமாக செல்வதால், அவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். குடகு மாவட்டத்தில் மீண்டும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மறுசீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story