உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், நகராட்சியில் தனியார் துப்புரவு ஊழியர்களை காண்டிராக்ட் முறையில் நியமிப்பதை கைவிட வேண்டும், பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளுக்காக நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சங்க தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் வீரமுத்து வாழ்த்திப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன், ரமேஷ், கதிரேசன், ரங்கநாதன், கலியமூர்த்தி, ஆனந்தன், ஏகாம்பரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் காரணமாக உழவர்கரை நகராட்சியில் நேற்று பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.