அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
புதுச்சேரி என்ஜினீயரிங் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் நேற்று மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலாப்பட்டு,
புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 4 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு மாணவ, மாணவிகளுக்காக தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இந்தநிலையில் அந்த கல்லூரியில் உள்ள ஆய்வுக்கூடத்தை நவீனப்படுத்தி புதிய கருவிகள் வாங்கி ஆய்வுக்கூடத்தில் வைக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாணவர்களின் கலைவிழாவை இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கல்லூரி முதல்வர் தனஞ்செயன் அங்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு காலை 11 மணி அளவில் வகுப்புகளுக்கு சென்றனர்.