சேத்தியாத்தோப்பு அருகே கொத்தனார், தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற மனைவியும் உடல் கருகி சாவு


சேத்தியாத்தோப்பு அருகே கொத்தனார், தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற மனைவியும் உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 29 Aug 2018 4:30 AM IST (Updated: 29 Aug 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே கொத்தனார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் உடல் கருகி பலியானார்.

சேத்தியாத்தோப்பு,

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்துள்ள சின்னநற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் வெற்றிவேல்(வயது 36). கொத்தனார். இவருடைய மனைவி சுந்தரி(30). இவர்களுக்கு விஸ்வா(10) என்ற மகனும், மேனகா(8) என்ற மகளும் உள்ளனர்.

மது குடிக்கும் பழக்கம் உடைய வெற்றிவேல் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்துள்ளார். இதை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கண்டித்து வந்துள்ளனர். இதனால் கணவன்–மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் வெற்றிவேல் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது சுந்தரி, ஏன் வேலைக்கு செல்லாமல் இருக்கிறீர்கள் என கண்டித்துள்ளார்.

இதில் மனமுடைந்த வெற்றிவேல் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுந்தரி, தனது கணவர் மீது பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். இதில் அவரது மீது தீ பற்றி எரியத் தொடங்கியது. தீக்காயமடைந்த இருவரும் வலியால் அலறித்துடித்தனர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து, வெற்றிவேல், சுந்தரி மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் இருவரும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவன், மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வெற்றிவேலின் அண்ணன் பழனிவேல் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் கருகி கணவன்–மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story