தீயணைப்பு ஊழியர்கள் எனக்கூறி பட்டாசு ஆலையில் பணம் வசூலித்த 2 பேர் கைது


தீயணைப்பு ஊழியர்கள் எனக்கூறி பட்டாசு ஆலையில் பணம் வசூலித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2018 4:30 AM IST (Updated: 29 Aug 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

தீயணைப்புத்துறை ஊழியர்கள் எனக்கூறி பட்டாசு ஆலையில் பணம் வசூலித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம்,

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கங்கர்செவல்பட்டியில் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. அங்கு மோட்டார் சைக்கிளில் 2 நபர்கள் வந்துள்ளனர். ஆலையின் கணக்காளர் சக்கையாவிடம், தங்களை தீயணைப்பு துறை அலுவலர்கள் என அறிமுகம் செய்துகொண்டனர்.

பின்னர் ஆலையில் விதிமீறல் நடக்கிறது, இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்காமல் இருக்க தங்களுக்கு பணம் கொடுக்குமாறு கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து சக்கையா ஆலை உரிமையாளருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து 1000 ரூபாயை இருவரிடமும் கொடுத்து உள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் தண்ணீர் வேண்டும் என கேட்டனர். இதனால் தண்ணீர் கொண்டு வரஅடுத்த அறைக்கு சக்கையா சென்று உள்ளார். அப்போது இருவரும் அறையில் இருந்த பட்டாசு சுற்றும் பேப்பர் பண்டலை எடுத்துக்கொண்டு நைசாக வெளியே வந்துள்ளனர்.

தண்ணீர் கொண்டு வந்த சக்கையா இதைக்கண்டதும் உஷார் ஆனார். இந்த நிலையில் இருவரும் மோட்டார்சைக்கிளை அவசரம் அவசரமாக கிளப்பி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். சக்கையா உடனே சத்தம் போட்டு பட்டாசு ஆலை ஊழியர்களை திரட்டினார். அவர்கள் மோட்டார்சைக்கிளில் விரட்டிச்சென்று அந்த 2 பேரையும் மடக்கி ஆலங்குளம் போலீசில் ஒப்படைத்தனர்.

ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், காளிதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பவுல்தாஸ் ஆகியோர் பிடிபட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ஒருவர் வெம்பக்கோட்டை அருகே உள்ள வனமூர்த்திலிங்காபுரத்தை சேர்ந்த காசி அய்யனார் (வயது34) என்பதும், மற்றொருவர் சிவகாசி அருகேயுள்ள பராசக்தி காலனியை சேர்ந்த தேன்ராஜ் (40) என்பதும் தெரியவந் தது. இருவரும் தீயணைப்பு படை ஊழியர்கள் அல்ல என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் இது போன்று சிவகாசி, ஆமத்தூர், மாரனேரி ஆகிய பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் மிரட்டி பணம் பறிப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்ததும் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story