வெளிநாடு, கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ.8½ லட்சம் மோசடி
வெளிநாடு, கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வேலூர்,
காட்பாடி வண்டறந்தாங்கலை சேர்ந்தவர் சரஸ்வதி, வாலாஜாவை சேர்ந்தவர் தினேஷ். இவர்கள் இருவரும் நேற்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். அதில், “காட்பாடியை சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவர் சரஸ்வதியிடம் ரூ.2 லட்சமும், தினேஷிடம் ரூ.1 லட்சத்து 57 ஆயிரமும் வாங்கி உள்ளார். ஆனால் அவர் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் தர மறுக்கிறார். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
அதேபோன்று வேலூரை அடுத்த துத்திப்பட்டை சேர்ந்த சதீஷ், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி குண்ணத்தூரை சேர்ந்த சுரேந்தர் ஆகியோர் அளித்த மனுவில், “காட்பாடி லத்தேரியை சேர்ந்த ஆண் ஒருவர், கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இருவரிடமும் மொத்தமாக ரூ.5 லட்சம் பெற்றார். ஆனால் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகிறார். கொடுத்த பணத்தை திருப்பி தர மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
Related Tags :
Next Story