மெட்ரோ ரெயில் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


மெட்ரோ ரெயில் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 Aug 2018 3:30 AM IST (Updated: 29 Aug 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

திருவொற்றியூர் பகுதியில் மெட்ரோ ரெயில் திட்ட விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் பகுதியில் சாலைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அந்த பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது கழிவுநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் குளம்போல் தேங்கி உள்ளது. அந்த கழிவுநீர் வீடுகளையும் சூழ்ந்து உள்ளது. பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதுபற்றி மெட்ரோ ரெயில் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரெயில் நிறுவனத்தை கண்டித்து அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 150–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று விம்கோ நகர் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கழிவுநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் வீடுகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி உள்ளதாகவும், இதுபற்றி மெட்ரோ ரெயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறினாலும் அவர்கள் செவிமடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் மற்றும் மெட்ரோ ரெயில் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். உடைப்பு ஏற்பட்ட கழிவுநீர் குழாய்களை உடனடியாக சரி செய்து கொடுப்பதாக மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story