2018-19-ம் நிதியாண்டில், வங்கிகள் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி கடன்: கலெக்டர் ராமன் தகவல்


2018-19-ம் நிதியாண்டில், வங்கிகள் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி கடன்: கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2018 5:00 AM IST (Updated: 29 Aug 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2018-19-ம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.1000-ம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

காட்பாடி, 

வேலூர் மாவட்ட தொழில்மையம் மூலமாக ‘உலக முதலீட்டாளர் மாநாடு 2019’-க்கான ஆலோசனை கூட்டம் மற்றும் படித்து வேலையற்ற இளையோருக்கு சுயதொழில் தொடங்குவதற்கான கடனுதவி வழங்கும் கூட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட தொழில்மைய வளாகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் மணிவண்ணன் வரவேற்றார். மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தர்ராஜ், பாரத ஸ்டேட் வங்கி வட்டார மேலாளர் சேது முருகதுரை, கனரா வங்கி வட்டார மேலாளர் திலகராஜன், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன வளர்ச்சி திட்ட அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடியே 85 லட்சம் மதிப்பில் மானியக்கடனுக்கான ஆணையை கலெக்டர் ராமன் வழங்கி பேசியதாவது:-

சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு 2018-19-ம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.1000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, அதிக கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வங்கிகள் தான் காரணம். கடன் கேட்கும் விண்ணப்பதாரர்கள் தொழில் தொடங்க தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் தொழில் தொடங்குவதற்கான அறிவு முழுமையாக இருக்க வேண்டும். தகுதியும், அர்ப்பணிப்பும் இருந்தால் வங்கிகள் நேர்க்காணல் நடத்தி கடனுதவி வழங்குவார்கள். 2018-19-ம் ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் இங்கு நடைபெறுகிறது. இன்று ரூ.5 கோடியே 85 லட்சம் மானிய கடனுதவி தொழில் முனைவோருக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகள், வங்கி மேலாளர்கள், தொழில் முனைவோர்கள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தொழில்மைய உதவி இயக்குனர் அசோகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை உதவி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் தொகுத்து வழங்கினார்.

Next Story