பாலியல் தொல்லை விவகாரம்: ஆடியோ பதிவை வைத்து வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர், பேராசிரியைகள் ஆஜராக உத்தரவு


பாலியல் தொல்லை விவகாரம்: ஆடியோ பதிவை வைத்து வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர், பேராசிரியைகள் ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 29 Aug 2018 5:00 AM IST (Updated: 29 Aug 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

ஆடியோ பதிவை வைத்து உதவி பேராசிரியர், பேராசிரியைகள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. பணம் கேட்டு மிரட்டல் வருவதாக கல்லூரி முதல்வர் புகார் கூறி உள்ளார்.

வாணாபுரம், 

திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பாலியல் தொல்லைக்கு விடுதி காப்பாளர்களாக உள்ள பேராசிரியைகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டிய மாணவி, பேராசிரியைகள் பேசியதாக ஆடியோவை வெளியிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள் பேசிய ஆடியோ பதிவுகளையும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதாவிடம் மாணவி ஒப்படைத்துள்ளார். இதில், 10-க்கும் மேற்பட்ட உரையாடல் பதிவுகள் இருந்தன. மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆடியோவின் ஒரிஜினல் பதிவுகளையும், பேராசிரியைகளின் உரையாடல்களை பதிவு செய்த செல்போனையும் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்படி உரையாடலை பதிவு செய்த செல்போன், தன்னிடம் இருந்த அத்தனை ஆவணங்களையும் மாணவி ஒப்படைத்துள்ளார்.

இதனை வைத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் பேராசிரியைகள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை வளையத்திற்குள் பேராசிரியைகள் கொண்டு வரப்படுவதால் மாணவியின் பாலியல் தொல்லை புகாரில் பரபரப்பு தகவல்கள் வெளியாக கூடும் என தெரிகிறது.

ஒருவேளை விசாரணைக்கு ஆஜராக உதவி பேராசிரியரும், பேராசிரியைகளும் மறுத்தால் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, மாணவியின் பாலியல் புகாரில் வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியைகளிடம் பணம் கேட்டு மர்மநபர்கள் மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. பணம் கொடுக்கவில்லையெனில் பிரச்சினையை பெரிதுப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி பணம் கேட்டு அடிப்பணிய வைக்க முயற்சி நடப்பதாக கல்லூரி முதல்வர் புகார் கூறியுள்ளார்.

இந்த நிலையில் உதவி பேராசிரியரை கண்டித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல் சேகர் தலைமை தாங்கினார்.

இதில் பெண்கள் வழக்கறிஞர் சங்க தலைவர் ஷீலா, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட அமைப்பாளர் வக்கீல் சு.கண்ணன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் நிர்வாகிகள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் புவியன் நன்றி கூறினார்.

Next Story