ஊட்டி நகராட்சி வணிக வளாகத்தில் ரகசிய அறை அமைத்த ஓட்டலுக்கு ‘சீல்’


ஊட்டி நகராட்சி வணிக வளாகத்தில் ரகசிய அறை அமைத்த ஓட்டலுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 28 Aug 2018 10:45 PM GMT (Updated: 28 Aug 2018 8:07 PM GMT)

ஊட்டி நகராட்சி வணிக வளாகத்தில் ரகசிய அறை அமைத்த ஓட்டலுக்கு அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பாரதியார் வணிக வளாக கட்டிடம் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில் குத்தகை அடிப்படையில் கட்டப்பட்டு உள்ளது. வருவாய்த்துறைக்கு குத்தகை தொகை நிலுவையில் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் சிலர் பொதுமக்களுக்கும், குத்தகைதாரர்களுக்கும் இடையூறாக பல்வேறு மாற்றங்களை செய்து இருப்பதாகவும், ஒரு நபர் தனது ஓட்டல் அமைந்து இருக்கும் உள்பகுதியின் தரைக்கு அடியில் பல அடி ஆழத்தில் இரவு முழுவதும் ரகசிய குழி தோண்டுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதன்பேரில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தரையை தோண்டக்கூடாது என்று கூறி அந்த ஓட்டலை பூட்டி, சாவியை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அந்த நபர் பூட்டை திறந்து மீண்டும் ஓட்டலின் தரைப்பகுதியில் 6 அடி ஆழத்துக்கு குழி தோண்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். அந்த குழிக்குள் மின் இணைப்பு, தண்ணீர் வசதி, மார்பிள்ஸ் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மேலும் வெளிநாடுகளில் இருப்பதை போல் ஓட்டலின் அடிப்பகுதியில் ரகசிய அறை ஒன்று அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ஊட்டி நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) ரவி, நகராட்சி வருவாய் அதிகாரி பாஸ்கர், நகர கட்டிட ஆய்வாளர் மீனாட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு நேற்று சென்று பார்வையிட்டனர். அந்த கடையில் நகராட்சி அனுமதி இல்லாமல் குழி தோண்டியதும், தீயணைப்பு துறையின் அனுமதி இல்லாமல் நகராட்சி கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கும் வகையிலும் செயல்பட்டதால் அந்த ஓட்டல் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டது. அந்த ஓட்டலின் முன்பகுதியில் அதற்கான நோட்டீசும் ஒட்டப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:–

ஊட்டி நகராட்சி வணிக வளாகங்களில் நகராட்சி அனுமதி இல்லாமல் கடை மற்றும் ஓட்டல் வைத்திருப்பவர்கள் கட்டிட முறையை மாற்றி அமைப்பதும், நடைபாதையை மூடுவதும், வணிக வளாகத்தில் பயன்படுத்தப்படும் கழிப்பிடத்தை அடைப்பதும் ஊட்டியில் மட்டும் தான் நடக்கிறது. இந்த மாற்றத்தை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு துறையினர் புகார் அளித்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. குன்னூர் நகராட்சி கமி‌ஷனர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் தங்கும் விடுதியை அனுமதி இல்லாமல் வணிக வளாகமாக மாற்றிய கட்டிடங்களுக்கு ‘சீல்‘ வைத்து நடவடிக்கை எடுத்தார். அதேபோன்று ஊட்டியில் மாவட்ட கலெக்டர் நேரடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story