ஆசிய விளையாட்டு போட்டியில் கபடியில் வெள்ளி பதக்கம் பெற்ற பெண் காவலருக்கு ரூ.15 லட்சம் பரிசு


ஆசிய விளையாட்டு போட்டியில் கபடியில் வெள்ளி பதக்கம் பெற்ற பெண் காவலருக்கு ரூ.15 லட்சம் பரிசு
x
தினத்தந்தி 29 Aug 2018 2:30 AM IST (Updated: 29 Aug 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய விளையாட்டு போட்டியில் கபடியில் வெள்ளி பதக்கம் பெற்ற பெண் காவலருக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ரூ.15 லட்சம் பரிசு வழங்கினார்.

பெங்களூரு, 

ஆசிய விளையாட்டு போட்டியில் கபடியில் வெள்ளி பதக்கம் பெற்ற பெண் காவலருக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ரூ.15 லட்சம் பரிசு வழங்கினார்.

ரூ.15 லட்சம் பரிசு

இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் பெற்றது. அந்த குழுவில் இடம் பெற்று இருந்த கர்நாடக போலீஸ் துறையில் பணியாற்றி வரும் பெண் காவலர் உஷாராணியை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள பெங்களூரு வளர்ச்சி ஆணைய குடியிருப்பு வளாகத்தில் துணை முதல்மந்திரி பரமேஸ்வர் நேரில் சந்தித்து பாராட்டினார்.

அவருக்கு மைசூரு தலைப்பாகை, சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். மேலும் கர்நாடக அரசு சார்பில் பரிசு தொகையாக ரூ.15 லட்சத்திற்கான காசோலையையும உஷாராணிக்கு பரமேஸ்வர் வழங்கினார். அதன் பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்

கர்நாடக போலீஸ் துறையில் காவலராக பணியாற்றி வரும் உஷாராணி விளையாட்டில் தனக்கு உள்ள ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்டார். இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசியா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று கபடி போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.

சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை பாராட்டி ரூ.15 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையை வழங்கி இருக்கிறோம். சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெறுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. உஷாராணிக்கு போலீஸ் துறையில் ‘பி‘ நிலை பதவி வழங்கப்படும்.

டென்னிசில் தங்க பதக்கம்

அடுத்து வரும் நாட்களில் அவர் இன்னும் பல விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வெல்லட்டும் என்று வாழ்த்துகிறேன். அதே போல் டென்னிசில் தங்க பதக்கம் வென்றுள்ள ரோகன் போபண்ணாவுக்கும் பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Next Story