மதகுகள் உடைந்த கொள்ளிடம் அணையில் முதல் கட்டமாக 60 சதவீத சீரமைப்பு பணிகள் நிறைவு கலெக்டர் பேட்டி


மதகுகள் உடைந்த கொள்ளிடம் அணையில் முதல் கட்டமாக 60 சதவீத சீரமைப்பு பணிகள் நிறைவு கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 29 Aug 2018 4:30 AM IST (Updated: 29 Aug 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

மதகுகள் உடைந்த கொள்ளிடம் அணையில் முதல் கட்டமாக 60 சதவீத சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

ஜீயபுரம்,

திருச்சி முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் அணை கடந்த 22–ந் தேதி 9 மதகுகளுடன் உடைந்து விழுந்தது. கொள்ளிடம் அணையை கடந்த 24–ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் கொள்ளிடம் அணைக்கு பதிலாக 100 மீட்டருக்கு அப்பால் கிழக்குப்பகுதியில் புதிய தடுப்பணை ரூ.325 கோடி செலவில் கட்டப்படும் என்றும், வடகரையில் உள்ள 10 மதகுகளை இடித்து விட்டு ரூ.85 கோடி செலவில் அங்கும் புதிய மதகுடன் கூடிய தடுப்பணை கட்டப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் கொள்ளிடத்தில் அணை இடிந்த பகுதி தற்காலிகமாக சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அன்று முதல் கொள்ளிடம் அணை பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.


இந்த பணிகளை அவ்வப்போது மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து பணியை விரைவுப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை தற்காலிக சீரமைப்பு பணிகளை கலெக்டர் ராஜாமணி நேரில் ஆய்வு செய்தார். அங்கு பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட முதன்மை பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர் கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். பின்னர் கொள்ளிடம் ஆற்றில் படகில் சென்றவாறு மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கம்புகள் அடுக்கும் பணியினை கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார்.

இன்று(புதன்கிழமை) மணல் மூட்டைகள் அடுக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக பாறாங்கற்கள் லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. அதற்காக பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் இருந்து 100–க்கும் மேற்பட்ட லாரிகளில் பாறாங்கற்கள் இன்று ஏற்றி வரப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வுப்பணிகள் முடிந்ததும் மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–


முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சேதமடைந்த பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்ததாக பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடைபெற இருக்கிறது.பொதுப்பணித்துறை மூலம் 260 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சுவர் அமைக்கப்படும்.

 இப்பணியில் 600 பணியாளர்கள், 50 லாரிகள், 8 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 4 நாட்களுக்குள் முறைப்படி நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மிதவை பொக்லைன் மூலம் கொள்ளிடத்திற்கு வரும் நீரை காவிரிக்கு திருப்பி விடவும் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். 3 கட்டமாக நடக்க உள்ள சீரமைப்பு பணியில், தற்போது முதல் கட்டமாக 60 சதவீத சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. கொள்ளிடத்துக்கு வரும் தண்ணீரை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் 4 நாட்களில் நிறைவு பெறும். அதன் பின்னர் 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்தாலும் கொள்ளிடம் அணைக்கு பாதிப்பு ஏற்படாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story