நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொள்ளை முயற்சி
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் குடவறை கோவில் ஆகும். இந்த கோவில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தின் போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மேல கோவிலில் வைத்து கொடியேற்றம் நடந்தது. இதற்காக சாமி சிலைகள், முக்கிய பொருட்கள் எல்லாம் மேலகோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு விட்டன. மேலும் கோவிலை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் வெள்ளம் வடிந்த பிறகும் கோவிலை சுற்றி சேறும் சகதியுமாக உள்ளது.
கொள்ளை முயற்சி
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மர்ம நபர்கள் கோவிலில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். கோவிலில் சேறும் சகதியுமாக இருந்ததால் மூலஸ்தான கதவின் பூட்டை மர்ம நபர்களால் உடைக்க முடியவில்லை. மேலும் கோவில் கதவின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள அலுவலகத்தில் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடிக்க முயன்று உள்ளனர். கோவிலில் முக்கிய பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.
நேற்று காலையில் கோவிலுக்கு வந்த அர்ச்சகர் கோவில் பூட்டு உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் முருகையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். கோவிலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story