மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட 45.7 சதவீதம் விபத்துகள் குறைவு கலெக்டர் தகவல்


மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட 45.7 சதவீதம் விபத்துகள் குறைவு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2018 4:15 AM IST (Updated: 29 Aug 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட 45.7 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது என்று சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், போலீஸ் துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-

அனைத்து துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து பங்களிப்பு மற்றும் கடமைகளை உணர்ந்து பணியாற்றினால் சாலை விபத்துகளை முழுமையாக தடுக்க முடியும். பல்வேறு விதமான காரணங்கள் மூலம் விபத்துகள் நடைபெறுகின்றன.

சேலம் மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாகவும், போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாகவும் மாற்ற முதல்-அமைச்சர் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். சேலம் மாவட்டத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அத்தகைய இடங்களில் இந்நிதியை பயன்படுத்தி சாலையோர விளக்கு கள், வேகத்தடை, சாலை மைய தடுப்பு சுவர்கள், கூடுதல் சைகை விளக்குகள் மற்றும் பல்வேறு விதமான சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட கூட்டு முயற்சியின் மூலம் கிடைத்த பலன் என்னவென்றால் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை விபத்துகள் மூலம் 535 உயிர் இழப்புகள் ஏற்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை பல்வேறு விபத்துகளில் 290 உயிர் இழப்புகள் ஏற்பட்டது. எனவே கடந்த ஆண்டை விட 45.7 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது.

மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை மாநகர காவல்துறை மூலம் வாகனங்களில் அதி வேகமாக சென்றதாக 4,782 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 58,349 வழக்குகளும், இதர வழக்குகள் 22,799 என மொத்தம் 85,930 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி பேசினார். 

Next Story