பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம்: மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 5 பேர் கைது
பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக, மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக, மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வன்முறை
புனேயில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி, இடதுசாரி ஆதரவாளர்கள் ஒரு மாநாடு நடத்தினர். அதில் பேசியவர்கள், ஆவேசமாக பேசினர்.
அதைத்தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் உள்ள கோரேகாவ்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ‘‘ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்’’ என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்தனர். இதன்மூலம், மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்தது.
எழுத்தாளர் கைது
அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இந்நிலையில், அவரை கைது செய்ய புனே போலீசார், நேற்று ஐதராபாத்துக்கு சென்றனர். ஐதராபாத் போலீசாரின் ஒத்துழைப்புடன், வரவர ராவின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான கே.வி.குர்மாநாத், புகைப்பட நிபுணர் கிராந்தி ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
பின்னர், வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அவரை ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, புனேவுக்கு அழைத்து வந்தனர். புனே கோர்ட்டில் இன்று அவரை ஆஜர்படுத்துகிறார்கள்.
வக்கீல்
இதுபோல், மாவோயிஸ்டு ஆதரவாளர்களை குறிவைத்து தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் கண்டனம்
இந்த நடவடிக்கைகளுக்கு, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், ‘‘இந்த கைதை கண்டிக்கிறோம். உரிய குற்றச்சாட்டு இல்லாமல், எந்த மனித உரிமை ஆர்வலரையும் கைது செய்யக்கூடாது’’ என்றார்.
மேலும், பெண் எழுத்தாளர் அருந்ததி ராய், பிரபல வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story