5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் அக்டோபர் 4–ந் தேதி வேலைநிறுத்தம்


5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள்  அக்டோபர் 4–ந் தேதி வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 29 Aug 2018 11:00 PM GMT (Updated: 29 Aug 2018 2:44 PM GMT)

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் அக்டோபர் மாதம் 4–ந் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள்.

கன்னியாகுமரி,

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில அளவிலான பயிற்சி முகாம் கன்னியாகுமரி பெரியார்நகரில் 2 நாட்கள் நடந்தது. பயிற்சி முகாமுக்கு மாநில தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மனோகரன் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட தலைவர் இளங்கோ அறிமுக உரையாற்றினார்.

 மூட்டா அமைப்பின் பொதுச்செயலாளர் நாகராஜன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மாவட்ட செயலாளர் வினித், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில இணை அமைப்பாளர் செண்பகம், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத்தலைவர் சுவாமிநாதன், மூட்டா அமைப்பின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பொன்ராஜ் உள்பட பலர் பேசினார்கள்.

பயிற்சிமுகாமை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், 5 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்த 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் ஆசிரியர்கள் அக்டோபர் மாதம் 4–ந் தேதி ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்றும், போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

முடிவில் மாநில பொருளாளர் ஜம்பு நன்றி கூறினார்.

Next Story