நாகர்கோவில்–திருவனந்தபுரம் இடையே குண்டும் –குழியுமான தேசிய நெடுஞ்சாலை; வாகன ஓட்டிகள் அவதி


நாகர்கோவில்–திருவனந்தபுரம் இடையே குண்டும் –குழியுமான  தேசிய நெடுஞ்சாலை; வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 30 Aug 2018 4:15 AM IST (Updated: 30 Aug 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில்– திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை குண்டும்–குழியுமாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பத்மநாபபுரம்,

தமிழகத்தில் கடைக்கோடி மாவட்டமான குமரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்ல நாகர்கோவில்– திருவனந்தபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக அவர்கள் தினமும் நாகர்கோவில்– திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வாகனங்களில் சென்று வருகிறார்கள்.

மேலும், குமரி மாவட்டத்திற்கு வரும் வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல இந்த சாலையையே பயன்படுத்துகின்றனர். இதேபோல் கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். தற்போது இந்த சாலையில் ஆங்காங்கே பழுதடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தக்கலை அருகே கொல்லன்விளை பகுதியில் தொலைபேசி நிலையம் அருகில் சாலை சேதமடைந்து குண்டும்– குழியுமாக உள்ளது. இதேபோல் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இந்த பள்ளங்களால் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும், பயணிகளின் நேரமும் வீணாவதுடன் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.

இந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி பழுதாகி நிற்பதும், திடீர் பிரேக் போடுவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதுவதும் தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே குண்டும்– குழியுமான இந்த சாலையை உடனடியாக சீரமைக்க, நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story