ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு


ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Aug 2018 4:00 AM IST (Updated: 29 Aug 2018 9:58 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகராட்சி அலுவலக செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து நிலுவையில் உள்ள நபர்களுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் அளவு, நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வரும் குடிநீர் அளவு, திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

இதைதொடர்ந்து சிதம்பரம்பிள்ளை ஊருணிக்கு சென்ற அவர் ஊருணி கரைகளை சுற்றி அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திடவும், ஊருணிக்கு தண்ணீர் வருவதற்கான வரத்துக்கால்வாய் சரியான முறையில் சீரமைக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்பின்னர் அண்ணா நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் திடக்கழிவு மேலாண்மை பூங்காவின் செயல்பாடு குறித்து அவர் ஆய்வு செய்தார்.

அதன்பிறகு காந்திநகர் பகுதிக்கு சென்று குடிநீர் வினியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் நல மையத்தின் அருகே தண்ணீர் தேங்கி கழிவுநீர் போன்று இருப்பதை கண்ட கலெக்டர் உடனடியாக அதனை சரி செய்ய உத்தரவிட்டார். ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்திற்கு சென்ற கலெக்டர், பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கட்டண கழிப்பறையின் பயன்பாடு மற்றும் பராமரிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். கழிப்பறை செல்வதற்கு பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து கேட்டறிந்தார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதை திடீர் ஆய்வு செய்து உறுதி செய்ய நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும் பஸ் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளின் உரிமையாளர்களிடம் சுற்றுப்புறத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, உதவி பொறியாளர் சுப்பிரமணிய பாபு உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story