மணல் கொள்ளையால் தான் அணைகளுக்கு ஆபத்து பி.ஆர்.பாண்டியன் பேட்டி


மணல் கொள்ளையால் தான் அணைகளுக்கு ஆபத்து பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 30 Aug 2018 4:30 AM IST (Updated: 29 Aug 2018 10:47 PM IST)
t-max-icont-min-icon

மணல் கொள்ளையால் தான் அணைகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–


கர்நாடக நீர்ப்பாசனத்துறை செயலாளர் சிங், 1 மாதத்தில் 310 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த தண்ணீரை தமிழக அரசு சேமித்து வைக்காமல் கடலில் கொண்டு போய் கலக்க செய்து விட்டதாகவும் உண்மைக்கு புறம்பாக குற்றம்சாட்டியுள்ளார். பேரிடர் காலத்தில் வரும் தண்ணீர் கடலில் கலப்பது தான் சரியானது. இந்த தண்ணீரை தேக்கி வைக்க இடம் இல்லை. இதற்கு ஏற்ற ஒரே இடம் ராசிமணல் தான். ராசிமணலில் அணை கட்டுவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.

இந்த அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளேன். முக்கொம்பு மேலணையில் மணல் மூட்டைகள் வைத்து தடுப்புகளை ஏற்படுத்துவது பேராபத்தாகும். இது பலன் அளிக்காது. இரும்பு தூண் அமைத்து தற்காலிகமாக தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.


மணல் கொள்ளையால் தான் அணைகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே மணல் கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு ஆதார விலையாக ரூ.200 உயர்த்தியது ஏமாற்றம் அளித்தது. தமிழக அரசு ஊக்கத்தொகையாக ரூ.400 அறிவிக்க வேண்டும். கல்லணையில் இருந்து முறைப்பாசனம் வைத்து ஆறுகளில் முழு அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story