கள்ளக்காதல் குறித்து கேட்டதால் தகராறு: மனைவியின் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற வாலிபர் கைது


கள்ளக்காதல் குறித்து கேட்டதால் தகராறு: மனைவியின் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2018 3:45 AM IST (Updated: 30 Aug 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே கள்ளக்காதல் குறித்து கேட்டதால் ஏற்பட்ட தகராறில் மனைவியின் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணல்மேடு,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் திருஞானசம்பந்தம் (வயது 32). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வினோதா(30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருஞானசம்பந்தத்துக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

சம்பவத்தன்று வினோதா, திருஞானசம்பந்தத்திடம் கள்ளக்காதல் குறித்து கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது திருஞானசம்பந்தம் தனது கள்ளக்காதலியை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்து உள்ளது.

இந்த தகராறின்போது ஆத்திரம் அடைந்த திருஞானசம்பந்தமும், அவருடைய குடும்பத்தினரும் வினோதாவின் வாயில் எலி மருந்தை (விஷத்தை) ஊற்றி கொலை செய்ய முயன்றனர்.

இதை பார்த்த அக்கம்,பக்கத்தினர் வினோதாவை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வினோதா மணல்மேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் திருஞானசம்பந்தம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் திருஞானசம்பந்தத்தை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலிக்காக மனைவியின் வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story