12 ஆண்டுகளுக்கு பிறகு கல்லட்டி மலையில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்


12 ஆண்டுகளுக்கு பிறகு கல்லட்டி மலையில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்
x
தினத்தந்தி 30 Aug 2018 4:00 AM IST (Updated: 30 Aug 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

கல்லட்டி மலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

மசினகுடி,

மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடத்தில் நீலகிரி அமைந்துள்ளது. 65 சதவீத வனப்பகுதியை கொண்டுள்ள நீலகிரியில் சோலை காடுகளும், புல்வெளிகளும், முட்புதர்களும் உள்ளன. இதனால் உயிர் சூழல் மண்டலத்தில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. பல்வேறு வகையான தாவரங்களையும், வனவிலங்குகளையும் கொண்டுள்ள இந்த பகுதிக்கு நீலகிரி என பெயர் வர முக்கிய காரணம், இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்களே ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டருக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் 9 வகையான குறிஞ்சி மலர்கள் காணப்படுகின்றன. அதில் நீலக்குறிஞ்சிக்கு தனிச்சிறப்பு உண்டு. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருக்கும் அவை, பொதுவாக ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பூத்துக்குலுங்கும். அப்போது மலைப்பகுதி முழுவதும் நீல கம்பளம் போர்த்தியதுபோல காட்சி அளிக்கும். இதன் காரணமாகவே நீலகிரி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

நீலகிரியில் முக்குருத்தி, அவலாஞ்சி, கல்லட்டி, எப்பநாடு ஆகிய வனப்பகுதிகளில் குறிஞ்சி மலர்களை காண முடியும். இங்கு காணப்படும் ஒவ்வொரு வகை குறிஞ்சி மலர்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பூக்கும் தன்மை கொண்டவை. அதில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய குறிஞ்சி மலர்ச்செடிகளை கல்லட்டி சாலை, எமரால்டு சாலை, மஞ்சூர் சாலை, பர்லியார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காண முடியும். ஆனால் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய நீலக்குறிஞ்சி மலர்ச்செடிகளை அடர்ந்த வனப்பகுதியில் தான் காண முடியும். எனவே எளிதில் நீலக்குறிஞ்சி மலர்ச்செடிகளை பார்த்துவிட முடியாது. இந்தநிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி மலர்கள் மீண்டும் பூத்துக்குலுங்க தொடங்கி உள்ளன. வெளிர் நீல நிறத்தில் கொத்து, கொத்தாக பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்களால் கல்லட்டி மலைப்பகுதி நீல கம்பளம் போர்த்தியதுபோல ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இது காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மலைப்பகுதிக்கு சென்று நீலக்குறிஞ்சி மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.


Next Story