காந்தியடிகளின் எளிமையை கடைபிடித்தால் ஊழல் முற்றிலும் இருக்காது - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு


காந்தியடிகளின் எளிமையை கடைபிடித்தால் ஊழல் முற்றிலும் இருக்காது - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
x
தினத்தந்தி 30 Aug 2018 5:15 AM IST (Updated: 30 Aug 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

காந்தியடிகளின் எளிமையை கடைபிடித்தால் ஊழல் முற்றிலும் இருக்காது என்று கோபியில் நடைபெற்ற தியாகி லட்சுமண அய்யர் சிலை திறப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

கோபி,

கோபியில் வாழ்ந்தவர் தியாகி ஜி.எஸ்.லட்சுமண அய்யர். கோபி நகராட்சியின் தலைவராக 2 முறை பதவி வகித்தவர். கோபியில் டி.எஸ்.ராமன் மற்றும் சரோஜினிதேவி விடுதிகள் அமைத்து ஆதிதிராவிட மாணவ-மாணவிகள் படிக்க உதவி செய்தவர். அவரது 102-வது பிறந்தநாளையொட்டி அவரின் நினைவாக கோபி வாய்க்கால் மேடு டி.எஸ்.ராமன் விடுதி வளாகத்தில் அவரது முழுஉருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தியாகி ஜி.எஸ்.லட்சுமண அய்யரின் முழு உருவச்சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், லட்சுமண அய்யர் குடும்பத்தினரை கவுரவித்தும், சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கியும் பேசினார்.

அப்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

எளிமையான வாழ்க்கை வாழுங்கள். அது இருளை போக்கிவிடும் என்கிறார் காந்தியடிகள். காந்தியின் எளிமையை நாம் கடைபிடிக்க வேண்டும். 100 சதவீதம் எளிமையான வாழ்க்கையை அனைவரும் கடைபிடித்தால் முழுமையாக ஊழல் இல்லாத நிலையை எட்டமுடியும் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சகோதரிகளே, சகோதரர்களே என்று எனது உரையை தொடங்குகிறேன். இது சிக்காக்கோவில் சுவாமி விவேகானந்தர் பேசும்போது அவர் பேசிய முதல் வாசகங்கள். தியாகி லட்சுமண அய்யரின் 102-வது பிறந்தநாள் விழாவில் அவரது சிலையை திறந்து வைத்து இருக்கிறேன். அவரது சிலையை இனிமேல் பார்க்கும் அனைவருக்கும் அவரைப்பற்றிய நினைவுகள் எழும்.

தியாகி லட்சுமண அய்யர் ஒரு உண்மையான காந்தியவாதி. அவர் காந்தியடிகளின் சத்தியாக்கிரக வழியை சுதந்திர போராட்டத்துக்காக மட்டும் பயன்படுத்தியவர் அல்ல. தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் காந்தியடிகளின் கொள்கைகளை கடைபிடித்து வந்தவர். எனவேதான் இத்தனை ஆண்டுகள் கடந்தும் கோபிசெட்டிபாளையம் மக்கள் அவர் மீது அன்பும் மதிப்பும் வைத்து இருக்கிறீர்கள்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கோபி நகராட்சியின் தலைவராக இருந்தபோது நகராட்சியில் மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும் நிலையை தடை செய்தவர் என்ற வியக்கத்தக்க செய்தி இங்குள்ள ஒருசிலருக்கு மட்டுமே தெரியும்.

60 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படிப்பட்ட புரட்சி என்பதை நினைத்துப்பார்க்கும்போது அதிசயமாக இருக்கிறது. இந்தியாவிலேயே இந்த திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்த நகராட்சி என்ற பெருமையையும் கோபிசெட்டிபாளையம் தியாகி லட்சுமண அய்யரால் பெற்று இருக்கிறது.

1928-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை காந்தியடிகள் அறிவித்தபோது அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அவரது பகுதியில் இருந்த ஆதிதிராவிட மக்களையும் அழைத்து சமபந்தி விருந்து நடத்தினார். அவரது வீட்டு கிணற்றில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதி அளித்தார். இதனால் அவருடைய இனத்தை சேர்ந்தவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி லட்சுமண அய்யரின் சகோதரி ஆனந்தலட்சுமியை அவரது புகுந்த வீட்டினர் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

லட்சுமண அய்யருக்கு 16 வயது ஆனபோது அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டரான வக்கீல் சுந்தரம் அய்யர், அலமேலு தம்பதியினரின் மகள் லட்சுமியை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பின்னர் லட்சுமண அய்யர் அவரது மனைவி லட்சுமியையும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடச்செய்தார். சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு ஆங்கிலேய அரசால் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 1942-ம் ஆண்டு காந்தியடிகளை லட்சுமண அய்யர் சந்தித்தார். அதன்பின்னர் சமூக மாற்றத்துக்கான பணியில் சிறிதும் தொய்வின்றி பணியாற்றினார். குறிப்பாக தீண்டாமை ஒழிப்பு, கோவில் நுழைவு இயக்கம், பெண் குழந்தைகள் கல்வி போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்தினார். இவருடைய சேவையால் கவரப்பட்ட காந்தியடிகள் இவரை ‘ஹரிஜன் சேவக் சங்க்’ அமைப்பு செயலாளராக நியமித்தார்.

தீண்டாமையால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காந்திஜியின் அழைப்பை ஏற்று அவர் பணிசெய்தார். அப்படிப்பட்ட மிகச்சிறந்த தியாகியின் சிலையை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், பயிற்சி கலெக்டர் பத்மஜா, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், புதுடெல்லி அகில இந்திய ஹரிஜன் சேவக் சங்க் தலைவர் சங்கர்குமார் சன்யால், லட்சுமண அய்யரின் குடும்பத்தை சேர்ந்த ஜி.எல்.சீதாலட்சுமி, ஜி.எல்.சுந்தரவடிவேலன், கமலம் பச்சையப்பன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் டி.எஸ்.ராமன், சரோஜினிதேவி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Next Story