உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்; 2 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். நண்பர் ஒருவரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரை சேர்ந்தவர் எத்திராஜ் மகன் மோகன்(வயது 32). தொழிலாளி. இவருக்கு திலகவதி(25) என்ற மனைவியும், ஸ்வேதா(4) என்ற மகளும் உள்ளனர். இவர் கடலூர் மாவட்டம் வீரப்பெருமாநல்லூரில் நேற்று மாலை நடைபெற இருந்த நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி மோகன் தன்னுடன் பணிபுரியும் சக தொழிலாளியான அதே ஊரை சேர்ந்த கார்த்திக்(32) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து இரவு 7.40 மணியளவில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை மோகன் ஓட்டினார். திருநாவலூர் கெடிலம்–பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டேங்கர் லாரி ஒன்று மோகன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோகன், கார்த்திக் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நண்பர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.