மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த வாலிபர் அடித்துக்கொலை, 3 பேர் கைது


மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த வாலிபர் அடித்துக்கொலை, 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2018 4:00 AM IST (Updated: 30 Aug 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை மேலூரை சேர்ந்தவர் நேவீஸ் பிரிட்டோ லூர்துராஜ்(வயது 36), தஞ்சாவூரில் உள்ள கோ–ஆப் டெக்ஸ்சில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு விக்டோரியன் ராணி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நேவீஸ் பிரிட்டோ லூர்துராஜ் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவர் சிகிச்சைக்காக மதுரை கலைநகரில் உள்ள மதுபோதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 7–ந்தேதி சேர்க்கப்பட்டார்.

அங்கு திடீரென்று அவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக அவரது மனைவிக்கு தகவல் வந்தது. உடனே அவர் வந்து பார்த்த போது கணவரின் உடலில் அதிக அளவிலான காயங்கள் இருப்பதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் காசி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் அங்கு சிகிச்சை பெறும் செல்லூர் சுயராஜ்யபுரத்தை சேர்ந்த ரமேஷ்(26) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து அவரை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த கொலை சம்பவம் வெளியே தெரிந்தால் பல்வேறு பிரச்சினைகள் வரும் என்று நினைத்து அந்த மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன்(36) கொலைக்கான தடயங்களை மறைத்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, நேவீஸ் பிரிட்டோ லூர்துராஜ் அந்த மையத்தில் சத்தம் போட்டுள்ளார். இது அங்கிருந்த ரமேஷ் மற்றும் 14 வயது சிறுவனுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை வெளியே சிகிச்சைக்கு அழைத்து சென்றால் பிரச்சினை பெரிதாகி விடும் என்று நினைத்து, அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல் மையத்தின் உள்ளேயே வைத்துள்ளார்.

சிகிச்சை பெறாமல் இருந்தால் நேவீஸ் பிரிட்டோ லூர்துராஜ் பரிதாபமாக இறந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் அழிக்கப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன், ரமேஷ் மற்றும் 14 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Next Story