செந்துறை அருகே கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த கோரி விவசாயிகள் சாலை மறியல்


செந்துறை அருகே கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 Aug 2018 10:45 PM GMT (Updated: 29 Aug 2018 7:42 PM GMT)

செந்துறை அருகே கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கூட்டுறவு சங்கத்திற்கு பூட்டு போட்டனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ளது நமங்குணம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். இந்த சங்கத்தை நமங்குணம், பழமலைநாதபுரம், குடிக்காடு, பாலையூர், சொக்கநாதபுரம், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், பெரும்பாண்டி உள்ளிட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சங்கத்திற்கு கடந்த 13-ந்தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 25-ந்தேதி வேட்புமனு தாக்கலும், 27-ந் தேதி வேட்புமனு வாபஸ் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனுக்கள் வாங்க வரவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து விவசாயிகள் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை யாருக்கும் தெரியாமல் விளம்பர பலகையில் போட்டி இன்றி 11 பேர் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு ஒட்டப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய இணைச்செயலாளர் சுந்தரம், வட்டார காங்கிரஸ் தலைவர் செந்தில், திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர் கருப்புசாமி உள்பட திரளான விவசாயிகள் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த கோரி நமங்குணம் செந்துறை- துங்கபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் செந்துறை துங்கபுரம் சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து சங்கத்திற்கு சென்ற விவசாயிகள் வங்கி ஊழியர்களை வெளியேற்றிவிட்டு சங்கத்தினை இழுத்து பூட்டினார்கள். அடுத்த அடுத்து நடைபெற்ற இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story