நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது கர்நாடகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்


நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது கர்நாடகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
x
தினத்தந்தி 30 Aug 2018 3:00 AM IST (Updated: 30 Aug 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாளை(வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாளை(வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் 49 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

கர்நாடகத்தில் மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்டு 31–ந் தேதி (அதாவது நாளை) தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 2,664 வார்டுகளுக்கு 9 ஆயிரத்து 697 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிரமான தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நகர பகுதிகளில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பகிரங்க தேர்தல் பிரசாரம் நேற்று காலை 7 மணியுடன் ஓய்ந்தது. ஆயினும் கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் மாலையுடன் தங்களின் பிரசாரத்தை முடித்துக் கொண்டனர்.

49 லட்சம் வாக்காளர்கள்

அந்தந்த பகுதிகளில் தங்கியுள்ள வெளியூரை சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. நாளை(வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே 29 வார்டுகளில் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ராய்ச்சூர், சாம்ராஜ்நகர் ஆகிய 2 மாவட்டங்களில் 2 வார்டுகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் சுமார் 49 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தனித்து போட்டியிட்டுள்ளன. இந்த தேர்தல் பணியில் சுமார் 50 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் வருகிற 3–ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.


Next Story