காலாப்பட்டில் 100 ஏக்கரில் தென்னிந்திய விளையாட்டு பல்கலைக்கழகம் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
காலாப்பட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் தென்னிந்திய விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை முதல்– அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆகியோர் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார்.
டெல்லியில் இருந்து புதுவை திரும்பிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூ.524 கோடியில் விளையாட்டு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு உள்ளது. இதேபோல 5 மாநிலங்களை இணைத்து நாடு முழுவதும் விளையாட்டு பல்கலைக்கழகங்களை அமைக்க மத்திய அரசு நிதி தருவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதுவையில் தென்னிந்தியாவுக்கான விளையாட்டு பல்கலைக்கழகத்தை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தோம்.
இதற்கு 100 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. புதுவை பல்கலைக்கழகத்தில் 700–க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை ஜனாதிபதியும், புதுவை பல்கலைக்கழக வேந்தருமான வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசிய போது புதுவையில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்க பல்கலைக்கழகத்தில் 100 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவரும், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். நிலம் வழங்கிய பின்னர் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.
புதுவையில் இருந்து தற்போது ஐதராபாத், பெங்களூருக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 2 விமானங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் திருப்பதி, கொச்சி நகரங்களுக்கு தனி விமானம் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். விமான நிலையத்தில் மேலும் ஒரு ஓடுதளம் அமைத்து, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 250 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தமிழகத்தில் இந்த நிலத்தை கேட்டு வருகிறோம். நிலத்திற்கு விலை நிர்ணயம் செய்வதில் இரு மாநிலத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு ஒரு முடிவெடுத்து தர கோரியுள்ளோம். தமிழகத்திடம் நிலம் பெற சிறப்பு நிதி தர வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரியுள்ளோம். விமான போக்குவரத்து ஆணையம் புதுவையில் விளையாட்டு திடல்கள் அமைக்க நிதி அளிப்பதாக கூறியிருந்தனர். இந்த நிதியின் கீழ் புதுவையில் 8 இடங்களிலும், காரைக்காலில் 2 இடங்களிலும், மாகி, ஏனாம் ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்தில் விளையாட்டு திடல் அமைக்கப்பட உள்ளது. அடுத்தமாதம் இதற்கான நிதி கிடைக்கும்.
சேதராப்பட்டில் 50 ஏக்கர் பரப்பளவில் ஜிப்மர் மருத்துவமனையில் கிளை அமைக்கப்பட உள்ளது. இங்கு உடலுறுப்பு மாற்று சிகிச்சையுடன் கூடிய உயர் சிகிச்சை மையம் ரூ.1,400 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிக்காக முதல் கட்டமாக ரூ.564 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணிகள் 10 நாளில் தொடங்கப்பட உள்ளது.
ஜிப்மரில் இல்லாத துறைகள் அங்கு ஏற்படுத்தப்படும். ஜிப்மரின் சேவை அனைத்து பிராந்தியத்திலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏனாமிலும் ஜிப்மர் சேவை அடுத்தமாதம் தொடங்க உள்ளது. தேங்காய்திட்டு துறைமுகத்தை தூய்மையான துறைமுகமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.20 கோடி நிதி அளிக்க உறுதியளித்துள்ளது. இந்த நிதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.