குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2018 4:15 AM IST (Updated: 30 Aug 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி காலிகுடங்களுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலனி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டமங்கலம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பெரியபாபு சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட வனத்தாம்பாளையம் காலனி பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த காலனி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்து காலி குடங்கள் மற்றும் கழிவுநீர் பாட்டிலுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்–இன்ஸ்பெக்டர்கள் மோகனசுந்தரம், கோபி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்று காலனி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story