மதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் ஜன்னல் வழியாக குதித்தவர் கன்டெய்னர் லாரி மோதி சாவு
ஓடும் பஸ்சில் ஜன்னல் வழியாக குதித்தவர் கன்டெய்னர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.
மதுராந்தகம்,
சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 35). கொத்தனார். இவர் நேற்று திருவண்ணாமலையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு பஸ்சில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்த போது குடும்பத்தகராறு தொடர்பாக செல்போனில் பேசியவாறு வந்து கொண்டிருந்தார். அப்போது ஆத்திரத்தில் ஓடும் பஸ்சில் இருந்து ஜன்னல் வழியாக குதித்தார்.
அந்த வழியாக மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி அவர் மீது மோதியது.
இதில் உடல் நசுங்கி முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்.
இறந்த முருகனுக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.