சொத்து தகராறில் தந்தையை கொன்ற தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
குடியாத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வேலூர்,
குடியாத்தம் அருகேயுள்ள கத்தாரிக்குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 62), விவசாயி. இவருக்கு ரமேஷ் (38) என்ற மகனும், பத்மா (35) என்ற மகளும் உள்ளனர். பத்மா திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். ரமேஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு பெருமாள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ரமேசை வீட்டிற்கு வர அவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரமேஷ் அதே பகுதியில் காதல் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பெருமாளுக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை ரமேஷ் பிரித்து கேட்டுள்ளார். வேறு சமூக பெண்ணை திருமணம் செய்ததால் சொத்தில் பங்கு தரமுடியாது என பெருமாள் மறுத்துள்ளார். இது தொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் கடந்த 2016–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13–ந் தேதி கோடரியால் பெருமாளை வெட்டிக்கொலை செய்தார்.
இது தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து ரமேசை கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சொத்து தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற ரமேசுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அண்ணாமலை ஆஜரானார்.
தீர்ப்பு வழங்கப்பட்டபின் பலத்த காவலுடன் ரமேசை போலீசார் வேலூர் மத்திய ஜெயிலுக்கு அழைத்து சென்று அடைத்தனர்.