பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றபோது 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது


பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றபோது 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 30 Aug 2018 4:00 AM IST (Updated: 30 Aug 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

பிரசவத்துக்காக 108 ஆம்புலன்சில் அழைத்துச்சென்றபோது பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே உள்ள தேவனூரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). இவர் மணலூர்பேட்டையில் சலூன்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஐஸ்வர்யா (26). இவர்களுக்கு நிவேதாஸ்ரீ (3), ஜெயஸ்ரீஅம்பிகா (1½ ) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா மீண்டும் கர்ப்பமானார். கடந்த 27–ந் தேதி இரவு அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதனால் அருண்குமார் அவரை காட்டாம்பூண்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கிருந்த டாக்டர்கள் ஐஸ்வர்யாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து அருண்குமார் மனைவி ஐஸ்வர்யாவை 108 ஆம்புலன்ஸ் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். சு.வாழாவெட்டி அருகே சென்ற போது ஐஸ்வர்யாவுக்கு ஆம்புலன்சிலேயே அழகான ஆண்குழந்தை பிறந்தது.

அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யாவும், குழந்தையும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அருண்குமார்கூறுகையில், ‘‘எனக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். 3–வது ஆண் குழந்தை வேண்டும் என்று எங்களுக்கு ஆசை. குலதெய்வத்திடம் ஆண் குழந்தை கேட்டு வேண்டினோம். இந்த நிலையில் 3–வது ஆண் குழந்தை பிறந்ததால் அவனுக்கு குலதெய்வமான அய்யனார் பெயர் சூட்ட உள்ளோம்’’ என்றார்.


Next Story