சங்கரன்கோவில் அருகே மலையில் குடியேறி கிராம மக்கள் போராட்டம்
சங்கரன்கோவில் அருகே மலையில் குடியேறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே மலையில் குடியேறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்குவாரிக்கு எதிர்ப்பு
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாடிக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்டது ஆனையூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு பிரதான தொழில் விவசாயமாகும். இப்பகுதியை சுற்றி ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இதனால் வீடுகளில் அதிர்வுகளும், ஆடு, மாடுகளுக்கு பாதிப்பும் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறி வந்தனர்.
இதற்கிடையே ஒரு தனியார் கல்குவாரி கடந்த 2014-ம் ஆண்டு முதல் செயல்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் அந்த கல்குவாரி மீண்டும் இயங்குவதற்கு, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. கடந்த 10-ந் தேதி அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டமும் நடத்தினர்.
மலையில் குடியேறி போராட்டம்
இந்த நிலையில் நேற்று முதல் அந்த கல்குவாரி செயல்பட தொடங்கியது. இதனைக் கண்டித்து அப்பகுதி கிராம மக்கள், ஊர் அருகே உள்ள மலையில் குடியேறி போராட்டம் நடத்தினர். இதையொட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. போராட்டத்தையொட்டி இரவு நேர சாப்பாடு தயாரிக்கப்பட்டது.
Related Tags :
Next Story