திருவரங்குளம் அருகே பாலையூர் பழங்கரை புராதன புரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


திருவரங்குளம் அருகே பாலையூர் பழங்கரை புராதன புரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 30 Aug 2018 10:45 PM GMT (Updated: 30 Aug 2018 7:19 PM GMT)

திருவரங்குளம் அருகே உள்ள பாலையூர் பழங்கரை புராதன புரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவரங்குளம்,

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே பாலையூர் பழங்கரையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை புராதன புரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 12-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தொடர்ந்து விஜயநகர மன்னர், பாண்டிய மன்னர் மற்றும் தொண்டைமான் மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட கோவில் ஆகும். இந்த கோவிலில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், 2 தெட்சிணாமூர்த்திகள், ஈஸ்வர பைரவர், நவக்கிரகங்கள், சக்தி, விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன் மற்றும் சப்த மாதர்களும் எழுந்தருளியுள்ளனர். பழமை வாய்ந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு, பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து கொடிமரம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய ராஜகோபுரம், கல்சிற்பங்கள் நிறைந்த மகா மண்டபம் என பல்வேறு திருப்பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து பெரியநாயகி அம்பாள் உடனுறை, புராதன புரீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 26-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 27-ந் தேதி மூர்த்தி ஹோமம் மற்றும் முதற்கால யாக பூஜைகள் நடைபெற்றன. 28-ந் தேதி 2 மற்றும் 3-ம் காலயாக பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் 4 மற்றும் 5-ம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், குமார் எம்.பி., தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து, ரெத்தினசபாபதி எம்.எல்.ஏ., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன்அரசு, மெய்யநாதன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 8.30 மணியளவில் யாக சாலையில் வைத்து பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து புராதன புரீஸ்வரர், பெரியநாயகி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, திருவரங்குளம், கலிங்கப்பட்டி, கத்தக்குறிச்சி, வெண்ணாவல்குடி, வேங்கிடகுளம், முத்துப்பட்டிணம், பாலையூர் பழங்கரை, குளவாய்பட்டி, சேந்தன்குடி, வல்லத்திராக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் கலெக்டர் கணேஷ், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், செந்தில்நாதன் எம்.பி., தொழில் அதிபர்கள் ராமச்சந்திரன், ரெத்தினம், குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார், திருவண்ணாமலை மடாதிபதி, கடையக்குடி திலகர், ஸ்தபதிகள் ஆறுமுகம், அழகப்பன், திருவரங்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்கமணி, வேங்கிடகுளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகிமைராஜ், வெண்ணாவல்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரு.வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை திருக்கோவில்கள் உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் ராமராஜன், கோவில் மேற்பார்வையாளர்கள் சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், தெட்சிணாமூர்த்தி மற்றும் பாலையூர், முத்துப்பட்டிணம் மற்றும் ஆயக்கட்டு கிராம மக்கள், திருப்பணிக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுக்கோட்டை, வல்லத்திராக்கோட்டை மற்றும் ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story